கண்ணம்மா 02
அதிகாலையில் நீராடி சீருடை அணிந்த சிறுவர்களை சாப்பிட அழைத்த செல்லம்மா திண்ணையின் பக்கம் சென்று,
“என்னங்கோ!!! பிள்ளயள் வெளிக்கிட்டிட்டினம், வாருங்கோவன் அத்தான் சாப்பிடுவம்“
என தனது கணவனை அழைத்தாள்.
திண்ணையில் அமர்ந்து ஆயிரம் கனவுகளில் மூழ்கியிருந்த கணேசனுக்கு செல்லம்மாவின் வரிகள், கனவுகளிலிருந்து அவனை மீட்டன. சோகம் குன்றாத ஒடுங்கிய முகம் தனது உதடுகள் அசைத்து
” நீ போய் சாப்புடு புள்ள நான் இப்ப வந்துர்றன்”
என்று கூறி வெறுப்பின் கண் மனம் வைத்து ஆமை வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான்.
கணேசன் - கட்டையான பருத்த உடல் கொண்டு, சுருள் தலைமயிர் கொண்டு, குறுந்தாடி கொண்டு, நெற்றியில் அடிமட்டம் வைத்து வரைந்தது போல மூன்று தடித்த கோடுகளை உடையதும்- பசும்பாலின் வெண்மையை உடையதுமான திருநீற்றை அணிந்து கொண்டு, அதன் நடுவே மஞ்சள் சந்தனத்தால் வட்ட வடிவமான பொட்டுடனும், சற்று அழுக்கான வேஷ்டியையும் அணிந்த உருவம் செல்லம்மாவை கண்டதும் ஒரு வரண்ட புன்முறுவல். செல்லம்மாவும் சிறிய புன்னகையால் மறுமொழி கூறி சமையலறைக்கு சென்று, உணவை கோப்பைகளில் இட்டு வெளியே கொண்டு வர அனைவரும் வட்ட மேசை மாநாட்டில் போல வட்டமாக அமர்ந்திருக்கிறார்கள். அப்போது குட்டிக்குமரேசன்
“ அப்பா எங்களுக்கெண்டா வாற கிழமயோட லீவு. இந்தமுற நாங்க எங்கப்பா போறது?“
“இல்லப்பா இந்த முற போறதுக்கு அப்பாகிட் நிறைய காசில்லப்பா. அடுத்த தடவ பாப்பம்!''
என்றான் கணேசன். “ச்ச பிள்ளயளின்ர விருப்பத்தக்கூட நிறவேற்றாம..'' என்று முணுமுணுக்க கண்களில் தேங்கிய கண்ணீர், இடம் காணாது இரு மூலைகளின் வழியாக வந்து நிலத்தை பதம் பார்த்தன.
“ சரி, சரி சாப்பிடுவம்” கணேசனின் கவனத்தை திசை திருப்பினாள் செல்லம்மா. உணவு உண்டபின் பிள்ளைகள் இருவரும் தமது கண்கண்ட தெய்வங்களாகிய தாய் - தந்தையரின் பாதங்களில் வீ்ழ்ந்து வணங்கி நல்லாசிகளைப் பெற்று கையசைத்தபடி பாடசாலை சென்றனர்.
தொடரும்..................
Comments
Post a Comment