இவ்வுலகம்
கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம்.
இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும்
இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும்
அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட
மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்
என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது.
ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள்
சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே
கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது.
அந்த
வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும்
போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை
விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவினை நோக்கியும் நாம் சென்று கொண்டிருக்கிறோம்
என்றால் அதனை இலகுவில் மறுத்துவிட முடியாது.
மொழிக்கலப்பு,
மொழித்திரிபு, வேற்றுமொழி மோகம், நாகரிகம் போன்ற வார்த்தைகளுள் அழிந்தவண்ணம் எம் சமுதாயத்தின்
ஒரு பகுதியும் செல்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
நான்
யார் என்ற ஒரு வினாவினை இலகுவாக எழுப்பிவிட முடிந்தாலும் அதற்குரிய பதிலை தேட முற்படுகையில்
எமது சிந்தை வெகுவாக பின்தங்கி இருப்பதை நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும். காரணம் வரலாறு
மீதான எமது கவனமின்மையே. எந்த ஒரு மானிடன் அந்நிய சுவாசம் தவிர்த்து தன் மூதாதையர்
சுவாசம் தாங்கிய வாழ்க்கையை நாடுகிறானோ அவன் தன்மீது, தன் சமுதாயம் மீது ஒரு பொறுப்பான
பார்வையை செலுத்த முற்படுகிறான். அது கடந்தகாலத்தினால் எழுந்த படிப்பினையாகட்டும் அல்லது
கடந்த கால கலாசார பண்பாடுகளாலாகட்டும். இவைகள் பற்றிய எண்ணக்கருக்களை கொண்டிராது பயணிக்கும்
மானிடன் தனது முகவரியை இழக்கிறான்.
அவுஸ்திரேலியாவையும்
தென்னாபிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துகொண்டிருந்த பெருநிலப்பரப்பான குமரிக்கண்டத்தவர்கள்
எம் மூதாதையர்கள். 1000வருடங்களுக்கு முன்பாகவே வெறும் 12 ஆண்டுகளில் 216 அடி கொண்ட
உலகையே மிரளச்செய்யும் கட்டிடக்கலைக்கு சான்றான தஞ்சை பெரிய கோவிலைக்கட்டியவர்கள் எங்கள்
மூதாதையர்கள். முதன்முதலில் அச்சுறுத்தும் படை கொண்டு அயல்நாட்டிற்கு படையெடுத்த மற்றும்
இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் – மலேசியா) உள்ளிட்ட நாடுகளை
ஆக்கிரமித்து அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த இராஜேந்திரனும் எம் மூதாதையரே!!!
இவ்வாறு
வியக்கத்தகு வரலாற்றின் வம்சத்தவர்கள் நாம். எமது கலாசாரம் பண்பாட்டு விழுமியங்கள்
மற்றும் எமது அனைத்தின் மூலமும் வேறு ஒன்றில் இருந்து தருவிக்கப்பட்டதல்லாது தமிழ்
என்னும் வரம்பினுள் மாத்திரம் இருப்பது எமது சிறப்பு.
ஆயகலைகள்
அறுபத்துநான்கிலும் வித்தகம் படைத்தவன் தமிழன் என்று சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழைய தமிழ்
படைப்புகள் எடுத்தியம்புவதன் மூலமும் காயகல்ப்ப நெறிமூலம் நீண்ட காலம் உடலினுள் உயிரைத்தேக்கி
வைத்து வித்தகம் கண்ட நிலைகள் மூலம் தமிழர்களது கலாசார பண்பாட்டுவிழுமியங்களின் ஸ்திரத்தன்மையையும்
அறிந்திடலாம்.
மற்றும்
மொழி என்று கருதும் போது பழைய காலத்தில் காணப்பட்ட தமிழ் மொழிக்கும் தற்போது வழக்கில்
உள்ள தமிழ் மொழிக்கும் மிகவும் பலதரப்பட்ட வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஆங்காங்கே காணப்படும்
வரலாற்றுப்புள்ளிகளை இணைப்பதன் ஊடாக தமிழ் மொழியின் எழுத்துகளும் வேற்றுமொழியுடன் சேர்ந்து
திரிபடைந்து வந்தது என்பதை விடுத்து அவை மொழிக்கலப்பிலாது காலவோட்டத்திற்கு ஏற்றவிதத்தில்
மாற்றங்களுக்கு உட்பட்டு வந்ததை அறியக்கூடியதாக உள்ளது.
பேச்சு,எழுத்து
எனும் இரு பரிமாணங்களினை நோக்கும் போது பேச்சினை விட எழுத்து காலவோட்டத்துடன் வெகுவாக
மாற்றப்பட்டிருப்பதை இனங்காணலாம். அது காலத்தின் கட்டாயமும் கூட. பண்டைய காலத்தில்
சைகை வழி மொழியும் அவை விளங்காத பட்சத்தில் உருவ எழுத்துக்களின் ஊடாக தமது கருத்தை
பரிமாறிய தன்மையினை பழைய நூல்களை புரட்டும் போது அறியக்கூடியதாக உள்ளது. பண்டைய தமிழ்
இலக்கண நூலான “யாப்பெருங்கல விருத்தி”
மேற்படி பண்பாடுகள் தமிழர் மத்தியில் செறிந்து காணப்பட்டது என்பதை பறைசாற்றுகிறது.
மலை என்பதற்கான பொருளினை “^^^” எனும் குறியீட்டின்
மூலம் பயன்படுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உருவங்கள் மூலமாக தமிழர்கள்
தமது மொழியை மெருகேற்றி மெருகேற்றி சங்ககாலத்திற்கு முன்னதாகவே முன்னர் பயன்படுத்தப்பட்ட
உருவ எழுத்துக்களின் பண்பு கெடாது தமிழ் எழுத்துக்களை வரிவடிவம் கொண்டும் குறித்த எழுத்துக்களுக்கு
ஒலி வடிவம் கொடுத்தும் எழுதும் முறைக்கு வித்திட்டனர்.
“உந்தி முதலா முந்துவளி தோன்றித்தலையினும் மிடற்றினும்
நெஞ்சினும் நிலையி பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்றமைய…… அவ்வழி பன்னீருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப்பிறந்த வளியின் இசைக்கும்..
” தொல்காப்பியம் கூறும் இப்பாடல் மூலம் தமிழ் உயிரெழுத்துக்கள் அனைத்தும் தொண்டையில்
நின்றிருக்கிற காற்றின் ஒலியைப்பெறுவதன் ஊடே உயிர்பெற்றிருக்கின்றன என்பதையும் அறியமுடிகிறது.
குகைகளிலும்
கல்வெட்டுகளிலும் உருவ எழுத்தை எழுதி வந்த மானிடன் காலப்போக்கில் களிமண் தட்டுக்கள்,
மரப்பட்டைகள் என்பவற்றை சீராக ஆக்கி அதில் எழுதி வந்தான். தமிழரின் எழுத்துவழக்கு என்று
நோக்கும் போது தமிழ்ப்பிராமி எழுத்துமுறை பற்றி சற்றே அதிகமாக அறியவேண்டிய அவசியம்
எம்மவர்களிடத்தில் காணப்படுகிறது. அத்துடன் பிராகிருத வழக்கம் பிராமிய வழக்கத்திலும்
வயது கூடியது என்பதால் பிராமி எழுத்துக்களுக்கு பிராகிருத வழக்கம் வித்திட்டிருக்கலாம்
என்று எண்ணினாலும் வடபிராமி தென் பிராமி என்று
பிராமி எழுத்துக்கள் பொதுவாக வகைப்படுத்தப்பட்டாலும் தமிழ்ப்பிராமிக்கும் (தென் பிராமி)
பிராகிருத மொழிக்கும் இடையில் தொடர்புகளை ஆய்வாளர்களால் காணமுடியவில்லை என்பது கவனிக்க
வேண்டியதாகிறது. மேலும் வடபிராமி தமிழ்ப்பிராமி போன்றவற்றினை நோக்கும் போது தமிழ்ப்பிராமியில்
காணப்படும் சில எழுத்துகள் (ற, ன, ள, ழ) வட பிராமியில் காணப்படவில்லை அத்துடன் தமிழ்ப்பிராமி
வடபிராமியுடன் ஒப்பிடும் போது எழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தனித்துவங்களை கொண்டிருப்பதன்
ஊடாகவும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகள் மூலம் பெரும்பாலானவை தமிழ்ப்பிராமி கல்வெட்டுக்களாக
இருப்பதால் தமிழனின் தமிழ் எழுத்துப்பாவனை பண்டைய காலத்தில் அதிக அளவில் காணப்பட்டது
என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் பிராமி எழுத்துக்களின் தோற்றம் அசோக மன்னனின்
ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்றது என்ற கருத்தும் நிலவி வருகிறதொன்றே. ஆனால் அசோகனின்
காலத்திற்கு (கி.மு 3ம் நூற்றாண்டு) முன்னரே தமிழ்ப்பிராமிய எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டு
வந்ததற்கான அகழ்வாராய்வுகள் (தேனியில் கிடைத்த
நடுக்கற்கள் மற்றும் 2008ம் ஆண்டளவில் எகிப்தில் கிடைக்கப்பெற்ற மண்சட்டிகள்) தமிழ்ப்பிராமியின்
காலத்தினை கி.மு 4ம் நூற்றாண்டிற்கும் முற்காலத்திற்கு கொண்டு செல்கின்றது.
கோலெழுத்துக்கள் மற்றும் மலையாண்மை
போன்ற எழுத்து முறைகள் பயன்படுத்தப்பட்டன. சங்க காலத்திலம் பயன்படுத்தப்பட்டு வந்தது
என்பதை அறியக்கூடியதாக உள்ளது. அதாவது கோல்களினை கொண்டு மை தடவி துணிகளில் எழுதும்
முறைக்கு கோலாண்மை என்று சொல்வது வழக்கம். “எழுதும்கால்
கோல் காணாக் கண்ணேபோல்” என்ற திருக்குறள் அடி மூலம் இரண்டாயிரம் வருங்களுக்கு முன்னதாகவே
தமிழர்கள் கோல்களை வைத்து எழுதும் முறையினை வைத்திருந்தார்கள் என்பதனை அறியக்கூடியதாக
இருக்கிறது. மற்றும் மலையாண்மை என்று நோக்கும் போது இவ்வகை எழுத்துக்களே மலையாள எழுத்துக்களிற்கு
வித்திட்டது என்று ஆய்வாளர்கள் பலராலும் இன்றளவிலும் கூறப்பட்டு வருகிறது. மேலும் தமிழின்
ஒருவகையான வாய்மொழி வடிவமாக மலையாண்மை காணப்பட்டமை பல்வேறு கிளை மொழிகளின் தாய்மொழியாக
தமிழ் காணப்படுவதை அனுமானிக்கக்கூடியதாக உள்ளது. கல்வியின் தேவையும் எழுத்துக்களின்
தேவையும் அதிகரிக்க அவை ஓலைச்சுவடி வரை சென்றிருந்தது. ஆயினும் கற்களிலும் குகைகளிலும்
மரப்பட்டைகளிலும் எழுதும் முறைகளை ஓலைச்சுவடிகளில் எழுதுவதில் உள்ள இடர்பாடுகளால் தமிழ்
எழுத்துக்களில் சில மாற்றங்களை புகுத்தி நிலையான கோடுகள் வரும் நிலையை நீக்கி வட்டநிலை
கோடுகளை பயன்படுத்தி எழுத்துக்களை எழுத ஆரம்பித்தனர். இதுவே பின்னர் வட்டெழுத்து ஆனது.
பல்வேறு ஆய்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பண்டைய நாணயங்கள், நடுக்கற்கள், பனையேடுகள்,
ஏட்டுச்சுவடிகள் போன்றவற்றின் மூலம் கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 13ம் நூற்றாண்டுவரை
இவ்வட்டெழுத்துமுறை பயன்பட்டு வந்தமையை அறியக்கூடியதாக இருக்கிறது.
மேலும்
இவ்வட்டெழுத்துமுறை மாலைதீவு, பர்மா, கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில்
மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் பண்டைய தமிழர் வர்த்தகம் பாரிய அளவில் பரவியிருந்தமையை ஏற்றுக்கொள்ளவேண்டியதாகிறது.மற்றும்
தமிழ் மொழி வரிவடிவ வரலாற்றினை நோக்கும் போது அங்கு கிரந்த எழுத்துமுறைக்கும் குறிப்பிடத்தக்க
இடமொன்றை அளிக்க வேண்டியதாகிறது. வடமொழிகளினை தென்னிந்தியாவில் எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்ட
முறையே இதுவாகும். தமிழ்நாட்டில் சமஸ்கிருதச்சொற்களை எழுதும் போது இந்த கிரந்த மொழி
எழுத்துமுறையே பயன்படுத்தப்பட்டது சங்கம் மருவிய காலத்தின் இறுதிக்கட்டத்தில் மேற்படி
எழுத்துமுறை தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்பட்டாலும் மணிப்பிரவாளத்தின் (தமிழ் + சமஸ்கிருதம்) வளர்ச்சிக்கு இந்த கிரந்த எழுத்துக்களே
முக்கியமானதென்பது தமிழ் அறிஞர்கள் பலரதும் கூற்று. எப்படியிருப்பினும் கி.பி 18 -19ம் நூற்றாண்டளவு
கொண்டு தமிழ்நாட்டில் கிரந்தமுறை தவிர்க்கப்பட மெல்ல மெல்ல கிரந்த எழுத்துமுறையும்
மறையலாயிற்று. இருப்பினும் இன்றளவிலும் வேற்றுமொழி உச்சரிப்பினை தமிழினில் எழுதிட சில
கிரந்த எழுத்துக்கள் (ஸ, ஜ, ஷ, ஸ்ரீ) பயன்படுத்தப்பட்டே வருகின்றன.
இன்றளவில்
தமிழ்ப்பேச்சுக்கும் எழுத்திற்குமான வேறுபாடுகள் அதிகமாக காணப்படுவதால் மேலதிக சில
கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்கவேண்டும் என்று சிலர் கூறினாலும் மொழிக்கலப்பு,
அந்நிய மொழி மோகம் என்ற விடயத்தை தமிழ்மொழியுடன் தவிர்த்து நோக்கும் போது இவ்வாறான
இடர்பாடுகள் காணப்படாது என்பதே திண்ணம். மானிடன் செல்லும் வழியில் தமிழ் இருப்பதை விடுத்து
தமிழ் செல்லும் வழியில் மானிடன் பயணித்தாலே ஆய்தமடங்கும் பதினெண் மெய்யும் பன்னீர்
உயிரும் போதும் செந்தமிழ் உணர்வெழுப்ப.
Comments
Post a Comment