Skip to main content

Posts

Showing posts from October, 2012

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம