பொதுவாக அனைத்து பொருட்களுக்கும் காணப்படுகின்ற கனவளவு ஆனது கருந்துளைக்கு மிகவும் சிறியதாகும். இங்கு அதன் கனவளவனது பூச்சியத்தை அணுகுவதாகவே காணப்படுகின்றது. ஆனால் கருந்துளையானது பிரமாண்டமான திணிவைக்கொண்டது. இதன் காரணமாக உயர் அடர்த்தியைக் கொண்டு விளங்குகின்றது. அதாவது அடர்த்தியானது முடிவிலியை அணுகுகின்றது. ஆகவே கருந்துளைக்கு மேற்பரப்பு என்று இருப்பதில்லை.
இது சம்பந்தமான ஆய்வுகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கருந்துளை மின் காந்த அலைகளையும் உறிஞ்சி விடுவதால் கட்புலனாகாத நிலையிலும் மேற்பரப்பு மற்றும் கனவளவு இல்லாமையாலும் இது தொடர்பான ஆய்வுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது பலருக்கும் புரிவதில்லை. ஆகவே அது சம்பந்தமாகவும் விளக்கமளிப்பது எனது ஆய்வின் முடிவை நீங்கள் உறுதியாக ஏற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
கருந்துளை பற்றிய ஆய்வுகள்
ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் முறைகள்
கருந்துளையானது தனது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள பொருட்கள் மீதும் ஈர்ப்பைக்கொண்டு காணப்படுகின்றது. இதன் விளைவாக சில இடங்களில் குறிப்பிட்ட அளவான நட்சத்திரங்கள் கருந்துளையை மையமாக கொண்டு சுற்றுகையை ஆற்றுகின்றன. எனவே அச்சுற்றுகையை ஆழமாக ஆராய்வதன் மூலம் கருந்துளையின் அமைவிடம் மற்றும் பற்றி அறியப்படுகின்றது.
இன்னும் சில இடங்களை எடுத்து நோக்குவோமாயின் கருந்துளைகள் தமது நிகழ்வெல்லைக்கு வெளியே உள்ள நட்சத்திரங்களை ஈர்க்காது விடினும் நட்சத்திரங்களில் இருந்து பலவிதமான வாயுக்களை ஈர்க்கின்றன. இவ்வாறு ஈர்க்கப்படுகின்ற வாயுக்கள் கருந்துளையை வேகமாக சுற்றியபடியே உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதன் காரணத்தால் கதிர்ப்புக்களை வெளிவிடுகின்றன. இக்கதிர்வீச்சுக்களை பூமியிலுள்ள விண்வெளி தொலைநோக்கிகள் மூலம் உணரமுடியும். அக்கதிர்வீச்சுகளை ஆராய்வதன் மூலமும் கருந்துளையின் அமைவிடம் அதன் தன்மை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கருந்துளையிலிருந்து வெவ்வேறு தூரத்தில் பொருளொன்றின் பாதைகளின் சாத்தியமான போக்கை கீழே காணலாம்.
தொடரும்...........
Comments
Post a Comment