வட அமெரிக்கா கண்டத்தையும் தென் அமெரிக்கா கண்டத்தையும் இணைக்கும் வகையில் அதன் பௌதிக கட்டமைப்பைக் கொண்ட பனாமா நாட்டில் பெருமளவு வருமானம் வரக்கூடிய வழி இந்த பனாமா கால்வாய் மூலம் தான். இவ்வாறு கடல் சார் வர்த்தகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பாதையாக விளங்கிவரும் பானாமாய் கால்வாயின் தோற்றத்தை நோக்கும் பொழுது அது பண்டைய கால வரலாற்றுச்சுவடுகளை ஆராய வைக்கிறது.
16ம் நூற்றாண்டளவில் பெரு, ஈக்குவேடார் மற்றும் ஆசிய நாடுகள் என்பவற்றில் இருந்து ஸ்பெய்ன் நாட்டுக்கான வர்த்தகத்தில் பல்வேறு பொருட்களை இடமாற்றம் செய்வது மிகவும் கடினமானதொன்றாக இருந்து வந்தது. இவ்வாறான கடினமான நீண்ட வர்த்தக பாதையினை எவ்வாறு இலகுவாக்கலாம் என்று அக்கால தொழில்நுட்ப வல்லுனர்கள் யோசித்து ஈற்றில் பனாமா நாட்டிலிந்து இருந்து ஒரு சிறிய பகுதியை அகற்றுவதன் மூலம் மேற்படி வர்த்தக செயற்பாடுகளை இலகுவாக்கலாம் என்று 1524ம் ஆண்டளவில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி திட்டம் முழு அங்கீகாரத்தையும் பெறவே பனாமாவின் ஊடாக செயற்கையாக ஒரு கால்வாயினை அமைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான வரைபடமும் 1529ம் ஆண்டளவில் தயாரிக்கபட்டது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு இராஜ்ஜியங்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களால் மேற்படி செயற்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பின்னர் 1534ம் ஆண்டளவில் ஸ்பானிய அரசாங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ள பனாமா கால்வாயின் அமைப்பிற்கு கிட்டதான வரைபடத்தை தயார்செய்தது. காலங்கள் செல்லச்செல்ல ஆட்சிமாற்றங்களும் மாறிக்கொண்டிருந்தன. இதனால் பனாமாக்கால்வாயின் அமைப்பு பற்றி காலத்திற்று காலம் பல்வேறு வரைபடங்கள் முன்வைக்கப்பட்டவையே தவிர அவை சார்பான வேறு எந்தவொரு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இப்படியே செல்லச்செல்ல நாளடைவில் ஸ்பானிய அரசாங்கம் பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பான செயற்பாடுகளில் அதிக ஆர்வத்தினை காட்டாது கைவிடும் எண்ணத்தில் இருந்தது.
பின்னர் 19ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலகட்டத்தில் ஜேர்மனி நாட்டு விஞ்ஞானி Alexander von Humboldt இனது புத்தகங்கள் பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பான ஆக்கங்களை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பனாமா கால்வாய் உருவாக்கத்திற்கு ஒரு காற்புள்ளியை (comma) வழங்கியது. இதன் உந்துசக்தியின் அடிப்படையில் 1819ம் ஆண்டளவில் ஸ்பானிய அரசாங்கம் மீண்டும் கால்வாய் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியது. இந்த தடவையில் வரைபடம் வரையும் செயற்பாடு மட்டுமன்றி இதற்கென தனிக்குழு ஒன்றை உருவாக்கியிருந்தது.
பின்னர் 1848ம் ஆண்டளவில் கலிபோனியாவில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படவே அமெரிக்க அரசாங்கமும் இதில் தலையிட ஆரம்பித்தது. 1850 இலிருந்து 1875ம் ஆண்டளவு வரை பல்வேறு செயற்திட்டங்கள் தர்க்கரீதியாக மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஈற்றில் செயற்பாட்டு ரீதியாக பனாமா கால்வாய் அமைப்பது தொடர்பாக இரு சிறந்த வரைபடங்கள் தெரிவுசெய்யப்பட்டன. ஒன்று பனாமாவின் ஊடாகவும் மற்றையது நிக்கறகுவாவின் ஊடாகவும் கால்வாய் ஒன்று அமையத்தக்க விதத்தில் இருந்தது.
தொடரும்.........
Comments
Post a Comment