பனாமா கால்வாயினை நோக்கும்போது அத்திலாந்திக் கடலோரத்தில் ஆரம்பித்து பசுபிக் கடலோரத்தில் முடிவடையும் வரை மொத்தமாக 3 பிரமாண்டமான பூட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது பூட்டு கட்டூன் பகுதியிலும் இரண்டாவது பெட்ரோ மிகுவெல் பகுதியிலும் மற்றும் மூன்றாவது மிறோபிளோர் பகுதியிலும் அமைக்கப்பட்டன.
கட்டூன் பகுதியில் இரு சமாந்தரமாக அமைக்கப்பட்ட பூட்டுத்தொகுதியானது பனாமா கால்வாயினூடாக பயணத்தை மேற்கொள்ளும் கப்பல்களை அத்திலாந்திக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவது இப்பகுதி தான். கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 90 அடி உயரம் அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இரு பூட்டுத்தொகுதிகளிலும் மொத்தம் 3 பகுதியாக கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து 30 அடி வீதம் உயர்த்தப்படுகின்றன.
குலேபரா மலைப்பகுதியினை பாரிய சவால்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அளவு அகழ்ந்து பின்னர் அப்பகுதியில் ( கட்டூன் ) கொங்கிறீட் இனால் கட்டப்பட்டதே இந்த பிரமாண்டமான பூட்டாகும். மேற்படி பூட்டு அமைப்பதற்கு அண்ணளவாக 1.53 மில்லியன் கனமீட்டர் கொங்கிறீட் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் கட்டூன் பகுதியில் உருவாக்கப்பட்ட பூட்டுப்பகுதியின் அகலம் 28.5 மீட்டர் அளவு என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1908ம் ஆண்டளவில் அமெரிக்க கடற்படையின் வேண்டுகோளுக்கு அமைய அதன் அகலம் 33 மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டது. அமைக்கபட்ட பூட்டு ஒவ்வொன்றினதும் நீளம் சுமார் 300 மீட்டர் அளவானதாக காணப்பட்டது. சூழ இருக்கும் சுவரினதும் அடியினதும் தடிப்பு 15மீட்டர் அளவிற்கு உருவாக்கபட்டது. மற்றும் கட்டூனில் உள்ள பூட்டுத்தொகுதிற்கு இடைப்பட்ட சுவரானது 18 மீட்டர் அளவினதாக அமைக்கப்பட்டது. இந்தப்பகுதியில் 24 மீட்டர் அளவு உயரமான சுவரும் எழுப்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பூட்டிற்கான கதவுகள் உருக்கினால் ஆக்கப்பட்டன. சராசரி தடிப்பு 2 மீட்டரும் நீளம் 19 மீட்டராகவும் மற்றும் 20 மீட்டர் உயரமாகவும் காணப்பட்டது.
பெட்ரோ மிகுவெல் பகுதியில் அமைக்கப்பட்ட பூட்டு தான் இம்மூன்று பூட்டுகளிலும் மிகவும் சிறியது. இது 10 மீட்டர் அளவு உயரத்தை குறைக்கும்அதிகரிக்கும் பணியினை மேற்கொள்கிறது. மிறோபுளோர் பூட்டு சுமார் 16மீட்டர் அளவில் இருபகுதியாக உயரத்தை குறைத்து பசுபிக் கடல்மட்டத்தினை அடைய செய்கிறது. கீழே காட்டப்பட்டிருக்கும் படமானது கட்டூன் பகுதியில் பூட்டுத்தொகுதி உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.
பனாமா கால்வாய் உருவாக்குவது தொடர்பில் ஆரம்ப காலம் முதலே ஆரம்பிப்பது பின்னர் விடுவது என்று பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு அமெரிக்க அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தமை வரவேற்கத்தக்கவிடயமே. இருப்பினும் ஆரம்பம் முதலே பல்வேறு சமூக ஆர்வலர்கள் இயற்கையை பாழ்படுத்தும் வேலை என கண்டனம் தெரிவித்தனர். அவர்களது கூற்றும் நிதர்சனமாகும் வகையில் பல்வேறு காலகட்டத்திலும் மழைபெய்யும் வேளைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அவையே மக்களின் வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் அமைந்தன. இந்த சவால்கள் பிரான்ஸ் அரசாங்கம் குலேபரா மலைப்பகுதியினை உடைத்துக்கொண்டிருந்த காலங்களிலேயே அதிகமாக ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டூன் பூட்டுத்தொகுதியின் தற்கால அமைப்பினை கீழுள்ள படத்தின் மூலம் காணலாம்.
தொடரும்............
Comments
Post a Comment