Skip to main content

காலத்துடனான ஓர் பயணம் 02 ( யார் ? இவர்கள் 09 )

காலம் எனும் பாதையில் மற்றவர்களை விட நாம் விரைவாக பயணிக்க முடியுமா? பாதையில் தவறவிட்டவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா?


இக்கேள்வியானது நகைப்பிற்கு இடமாக தோன்றலாம்.

இழந்த நேரத்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விடயமாகும். வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை நினைத்துப்பார்க்க முடியுமே தவிர மீண்டும் நாம் அங்கு செல்ல முடியாது என அனைவரும் கூறுவது வழக்கமாகும்.

நாம் செல்லவே முடியாத ஒன்றிற்கு எமது நினைவு மாத்திரம் எவ்வாறு செல்கிறது? சிலவேளைகளில் எமது நினைவானது எதிர்காலத்தையும் எண்ண முடிகிறதே... இது எவ்வாறு சாத்தியம்? இக்கேள்விகளுக்குரிய ஒரே பதில் நினைவு விரைவானது. நினைத்துப்பார்க்க முடியாத உயர்வேகத்தை உடையது என்பது தான். அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து எம்மால் அறியப்பட்ட மிக உயர் தூரமுடைய இடத்தையே கணப்பொழுதில் நினைத்து விடுகிறோம்.

உதாரணமாக,

நாம் இலங்கையில் கொழும்பில் இருப்பதாக எண்ணிக்கொள்வோம்.

1. கொழும்பில் உள ரயில் நிலையத்தை நினைக்கிறோம் எனில்,

அதனை எமது சாதாரண வாகனங்களால் அடைந்து கொள்ள முடியும்

உ-ம் சைக்கிள் தரத்திலானவை

2. கண்டி மாநகரை நினைக்கிறோம் எனில்,

எம்மால் அப்பிரதேசத்தை கார், இரயில் போன்றவற்றால் அடையமுடியும்

3. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை நினைப்போமாயின்,

அவற்றை விமானம், கப்பல் போன்றவற்றால் அடையமுடியும்.

4. சந்திரன், செவ்வாய் போன்றவற்றை நினைக்கிறோம். அவற்றை விண்கலங்கள் மூலம் அடைய முடிகிறது.



அதாவது எமது நினைவுகள் எவ்வளவிற்கு எவ்வளவு விரிகிறதோ மிகவுடனே செல்கிறதோ அவற்றை எம்மாலும் அடையமுடியும். ஆனாலும் நினைவின் வேகத்தின் அதிகரிப்பைப்போன்று நாம் இயங்கும் வாகனத்தின் கதியும் உயர்வாக வேண்டும்.

நினைவின் வேகத்திற்கும் நினைத்தவற்றை நாம் அடைய உபயோகிக்கும் வாகனத்தின் வேகத்திற்கும் இடையில் நாம் ஒரு வரைபை வரைந்தால்

அதாவது நினைவின் வேகத்துடன் ஒப்பிடும் போது எமது வாகனத்தின் வேகம் மிகவும் சிறிது.

நான் இதுவரை கூறியது நினைவிற்கும் தூரத்திற்குமான மாறல் பற்றியதாகும்.

எனினும் நினைத்ததை காலத்தால் தமது உடலுடன் சேர்ந்து அடைந்தவர்கள் என்று யாரும் இதுவரை இப்பூமியில் நாம் அறிந்தவரைக்கும் இல்லை எனலாம். ஆனாலும் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியை தமது உடலில் உணர்ந்து கொண்டு அச்சக்தியின் மூலம் தமது மனதை இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செலுத்தி அச்சம்பவங்களைக்கூறிய பலரை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இது அவ்வாறு இருக்க நாம் உடலுடன் எவ்வாறு காலத்திற்கு எதிராக பயணம் செய்வது?



அடுத்த பதிவில் காணலாம்.

Comments

  1. நண்பரே,நினைவின் வேகத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. (நீங்கள் நினைவு என்பது நினைத்துப்பார்க்க முடியாத அளவு வேகமானது எனக் கூறுகிறீர்கள்! அப்படியாயின் நாம் நினைவின் வேகத்தைப் பற்றி "நினைக்கும்" வேகமும், நினைவின் வேகமும் ஒன்றல்லவா? ஆகவே நாம் நினைவின் வேகத்தினால் நினைவின் வேகத்தை எட்டிப்பிக்க முடியுமல்லவா? எனவே நாம் நினைவின் வேகத்தை நினைத்துப் பார்க்க முடியுமல்லவா?)

    வேகம் என்பது யாது? ஒரு பொருள் கடக்கும் தூரத்தை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தால் வகுத்தல் வரும் அளவே அப்பொருளின் வேகமாகும். அப்படிப் பார்க்கும்போது நினைவுக்கு வேகம் கிடையாது! ஏனெனில் கண்டிமாநகரையும், வாஷிங்க்டன் வெள்ளை மாளிகையையும், ப்ளூட்டோ கிரகத்தையும், எதிர் காலத்தையும், கடந்த காலத்தையும் தனித்தனியே நினைத்து (கற்பனை செய்து) பார்க்க எடுக்கும் நேரம் ஒன்றுதான்.

    நினைவு எங்கும் பயணிப்பதில்லை. (Thought does not travel) ஏனெனில் நினைவில் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான தூரத்தினை பெரும்பாலும் நீங்கள் முழுமையாகக் கடப்பதில்லை. (நீங்கள் இங்கிருந்தபடி அமெரிக்காவை நினைத்தால், இலங்கையிலிருந்து நீங்கள் நேரடியாக அமெரிக்காவை அடைந்து விடுகிறீர்கள். பயணிப்பதில்லை. (இதனால்தான் நினைவுக்கு வேகம் கிடையாது) நினைவு என்பது ஒரு புள்ளியிலிருந்து மறைந்து மறு புள்ளியில் தோன்றும் காட்சியாகும். (Thought Just Teleports!)

    நினைவு என்பது ஒரு Physical object இல்லை. அது எங்கேயும் பயணிப்பதில்லை. நம் மூளையினுள் (ஒளிவேகத்தில்) பயணிக்கும் மின்சாரத் தொடர்புகளாலேயே நினைவு உருவாகிறது. நினைவை நீங்கள் எங்கும் அனுப்ப முடியாது (அது மூளைக்குள்ளேயே தான் சுற்றி வரும்) கடந்த காலத்தில் நாம் பெற்ற அனுபவங்களையோ தெரிந்துகொண்ட தகவல்களையோ வைத்து மூளை உருவாக்கும் ஒரு பிம்பமே நினைவு என்பதாகும். (எதிர்காலத்தைப் பற்றி நாம் கற்பனை செய்வதும் இப்படித்தான்)

    இது ஈராக் யுத்தத்தின் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பொன்றை கணினியில் ஓடவிட்டுப் பார்ப்பதற்குச் சமமாகும். நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் கணினியாலும், தொலைக்காட்சியாலும் கடந்த காலத்திற்கு (ஈராக் போர்க்களத்துக்கு) பயணிக்க முடியும்போல் தெரிகிறதே?!

    எனவே, காலத்தில் பின்னோக்கி பயணிப்பது ஐன்ஸ்டீன் சொல்வதுபடி சாத்தியம். ஆனால் மிகக்கஷ்டம். அதேவேளை நினைவுக்கு வேகமோ, நிறையா, எடையோ கிடையாது. எமது மனமாகிய CPU மனத்திரையில் ஒளிவேகத்தில் உருவாக்கும் காட்சிகளே நினைவுகள் ஆகும். ஐன்ஸ்டீனின் கருத்துப்படியும் வேறு சில அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படியும், ஈர்ப்புவிசை மூலம் காலத்தை வளைத்து மாத்திரமே கடந்த காலத்துக்கோ எதிர் காலத்துக்கோ பயணிக்க முடியும். அப்படிப் பயணிப்பதற்கு பயணிக்கும் பொருள் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படக்கூடியதாக இருத்தல் வேண்டும் (அப்பொருளுக்கு நிறை இருக்க வேண்டும்). அப்படி நிறைகொண்ட எப்பொருளாலும் காலத்தை கடக்க முடியும்.

    ReplyDelete
  2. நண்பரே Abarajithan கூறிய கருத்துக்களே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.

    ReplyDelete
  3. RAVIKARAN RANENTHIRAN24 June 2010 at 11:27

    நண்பரே, உங்களின் விமர்சனங்களை வாசித்தேன். கேட்கும் கேள்விகள் சரியோ பிழையோ எனது பதிவுகளை வாசித்து விமர்சனங்களை தெரிவிக்கும் உங்களுக்கு நன்றிகள். நாம் எழுதும் பதிவின் ஒவ்வொரு சொல்லையும் பலமான விஞ்ஞான பின்னணி காரணங்களின் உதவியுடனேயே முன்வைக்கிறோம். எனது சகோதரர் ரவிகரன் கோகுல்ராஜ் எழுதிய முந்திய தொடரின் (மாய ராஜ்ஜியம்) இறுதியில் விமர்சனங்களுக்காக தனிப்பதிவு இட்டது போல "யார் ? இவர்கள்” தொடரின் இறுதியில் மொத்த விமர்சனங்களுக்கான தனி எதிர்ப்பதிவை இடுகிறேன். அதுவரை “யார் ? இவர்கள்” தொடரின் அடுத்த பதிவுகளிலும் உங்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நல்லது நண்பரே,


    நினைவைப் பற்றிவும் காலப்பயனங்களைப் பற்றியும் விஞ்ஞான விளக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் மூளையின் அற்புதங்களைப்பற்றி விஞ்ஞான உலகம் இன்னும் பத்து பர்சென்ட் கூடப் புரிந்துகொள்ளவில்லை. (சொல்லப்போனால் இயற்கையில் எந்தவொரு பகுதியையுமே மனிதன் பத்து பெர்சன்ட் கூட புரிந்துகொள்ளவில்லை) இன்னும் ஆராய்ச்சி செய்கிறார்கள். அதேபோல் காலப்பயணமும் Theoretical (இயற்பியலில்) ஆகவும் Practical (ஆன்மிகத்தில்) ஆகவும் தனித்தனியாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றதே தவிர எந்தவொரு விஞ்ஞானியும் அவற்றுக்கென தனியான கோட்பாடொன்றை முன்வைக்கவில்லை. முன்வைக்க முடியவில்லை.

    உங்கள் கருத்துக்களுக்கான விஞ்ஞான விளக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். அதுமட்டுமன்றி நான் உங்கள் கருத்துக்களை பிழைகூறவில்லை. நீங்கள் கூறிய "நினைவுக்கு வேகம் உண்டு" என்பதைத்தான் நான் மறுத்திருக்கிறேன். மற்றும்படி நீங்கள் கூறிய காலப்பயன சாத்தியத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    நீங்கள் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பதிவு எழுதும் போது பலவகையான விஞ்ஞான ஆதாரங்களைக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நான் பதிவு எழுதுவதில்லை. பின்னூட்டம்தான் இடுகிறேன். பின்னூட்டத்தில் நான் கூறும் கருத்துக்களில் பெரும்பாலானவை எனது சொந்த எண்ணங்களாகும். அதில் ஏதாவது தவறு இருந்தால் தயவுசெய்து மன்னித்து தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. RAVIKARAN RANENTHIRAN25 June 2010 at 21:04

    நண்பரே, எனது கருத்தை தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். “யார் ? இவர்கள்” பதிவை தொடராக எழுதுவதால் தொடரின் இறுதியில் விமர்சனங்களுக்கான எதிர்ப்பதிவை எழுதலாம் என எண்ணியிருந்தேன். எனினும் எனது கருத்து தொடர்பாக உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் தொடர்பான சிறிய தெளிவாக்கலாகவே எனது கருத்து விஞ்ஞானப்பின்னணிகளுடன் வலுவாக முன்வைக்கப்படுவதாக கூறியிருந்தேன். அதாவது எனது சகோதரர் ரவிகரன் கோகுல்ராஜ் இன் முந்திய தொடரின் இறுதியில் இடப்பட்ட பதிவுகளைப்போன்று இந்த விமர்சனங்கள் மற்றும் ஏனைய விமர்சனங்களுக்காக ஒரு தனிப்பதிவை இறுதியில் இடலாம் என்கின்ற எண்ணத்திலேயே தெரிவித்திருந்தேன்.

    நண்பரே, உங்களது விமர்சனங்களை மிகவும் ஆழமாக விரும்புகிறோம். உங்கள் விமர்சனங்களே முந்திய தொடரில் கருத்துப்பரம்பலை அதிகரித்திருந்தது. அதேபோன்றதொரு தன்மையையே அடுத்துவரும் பதிவுகளிலும் உங்கள் விமர்சனங்களாக நாம் எதிர்பார்க்கிறோம். இவை இத்தொடரின் கருத்துப்பரம்பலையும் அதிகரிக்கும் என எண்ணுகிறேன். எனவே இது தொடர்பான உங்களுக்கு தவறான புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

    நன்றி.

    ReplyDelete
  6. மிக்க நன்றி நண்பரே, விளக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெர்முடாவும் கருந்துளையும் ( மாய இராஜ்ஜியம் 20 )

பெர்முடா மர்மம் பற்றிய ஆய்வுத்தொடர் (மாய ராஜ்ஜியம்) 19 பகுதிகளுடன் நிறைவடைந்து விட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வாசகர் ஒருவரின் கருத்துகளிற்குரிய பதில் கருத்துகளாக இப்பகுதி வெளிவருகிறது. அவ்வாசகரின் கருத்துக்களை பார்வையிட கீழுள்ள தொடர்பினை அணுகவும்.           http://unmayinpakkam.blogspot.com/2010/05/05_22.html#comments என்னுடைய ஆய்வு முடிவை நான் இரண்டு படிகளில் தெரிவித்திருந்தேன். முதலாவதாக அண்டவெளியில் ஆங்காங்கே தோன்றுகின்ற காலத்தால் வேறுபட்ட இடங்களை ஒத்த இடங்கள் பூமியில் தோன்றுவதன் சாத்தியமும் , இரண்டாவதாக இதன் விளைவாக கருந்துளை அவ்விடத்தில் உருவாகுவதற்கான வாய்ப்பும் ஆகும்.   1.சடத்துவ மற்றும் சடத்துவமல்லாத சார்புச்சட்டங்களின் சார்பியக்கத்தின் விளைவாக ஏற்படும் கால வேறுபாடு பற்றி ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இச்சார்பு விளைவு காரணமாக பிரபஞ்சத்தின் நடுவில் ஒரு பொதுக்கடிகாரம் பயன்படுத்தப்படுவது என்பது சாத்தியமற்றதாகின்றது. மேலும் விளக்குகையில், விரியும் பிரபஞ்சம், அதன் தாக்கத்தை தமக்குள் வெளிப்படுத்தும் ...

இறந்த காலத்தை அடைவோமா? ( யார் ? இவர்கள் 11 )

இறந்த காலத்தை அடைவது எப்படி? இங்கு நாம் பயன்படுத்தும் வேகம், ஒளியின் வேகத்தை அணுகும் போது எம்முடைய காலமானது மெதுவாக செல்லும். ஒளியின் வேகம் என்பதை தொடும் போது எமது காலமாற்றம் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் 0 எனலாம். பெரும்பாலும் எனது கருத்துப்படி இது எக்காலத்திலும் சாத்தியமற்றது எனலாம். ஆயினும் அவ்வாறு எமது வேகம் ஒளியின் வேகத்திற்குச் சமனாயின் அவ்வாறு ஒரு வாகனத்தை இயக்குபவர் காலத்தையே வென்றவராவார். அதாவது அவர் தனது வாழ்வை வாகனத்திற்கு வெளியில் உள்ளோரின் இயல்பான காலத்தின் படி வேண்டுமானவரை அவ்வாகனத்தில் கழிக்கலாம். சரி அடுத்ததாக எமது வாகனம் ஒளியின் வேகத்தை மீறும் போதே நாம் எமது இறந்த காலத்திற்குச் செல்வோம். அதாவது நாம் கடந்து வந்த காலத்திற்கு மீண்டும் செல்லலாம். எமக்கு வேண்டுமான காலத்தில் தரையிறங்கி அங்குள்ள எமது சிறு வயதுத்தோற்றங்களை கூட சந்திக்கலாம். ஆனால் அவர்கள் ( இறந்தகாலத்திலுள்ளோர் ) தமது காலமே இயல்பான போக்குடையது என உணர்வர். எனவே அவர்களைப்பொறுத்தவரைக்கும் அங்கு செல்லும் நாம் அவர்களின் எதிர்காலத்தோர் ஆவோம். இவ்வாறு செயற்படக்கூடிய இயலுமையை எமது மனித குலம் பெறுமாயின் இதன் விளைவா...

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...