Skip to main content

விழிநிலை விம்பங்கள்...


இருண்ட பூமி ஒவ்வொருநாளும் பிறக்கிறது. கதிரவன் கதிர்கள் ஒவ்வொரு நாளையும் பசுமையாக்குகின்றன. சுட்டெரிக்கவும் தவறுவதில்லை. வேற்றுலகில் பயணிக்கும் ஒவ்வொரு மனிதனும் கனவெனும் வாகனம் விட்டு இறங்கி பூவுலகை பார்க்கும் கோணங்கள் எத்தனை.

ஒருவனுக்கு வெறுப்பாக இருக்கின்ற உலகம் இன்னொருவனுக்கு இனிமையாக இருக்கிறது. இன்னொருவனுக்கு விளையாட்டாக இருக்கிறது. மற்றொருவனுக்கு சூனியமாக இருக்கிறது

ஒவ்வொரு மனிதனும் இறைநிலைக்குரிய சக்திகளை அடையக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல் கொண்டவன் என்று ஆன்மீகவாதி  கூறுகிறான். ஆனால் ஒவ்வொரு நாளையும் கடக்கும் சராசரி மனிதன் எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த நாளின் சவாலை முறியடிக்கத்தவறும் உள்ளங்கள் எத்தனை.

சங்கடங்கள், சந்தேகங்கள், வெறுப்புகள், துரோகங்கள், விரோதங்கள் என்று எத்தனை பரிமாணங்களில் ஒரு உள்ளம் பயணிக்கவேண்டி இருக்கிறது. இத்தனைக்கும் கையில் கிடைக்கும் 1000 ருபாய் தாளினை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதது இன்றைய காலகட்டத்தின் துர்ப்பாக்கியநிலை தான். நாளுக்கு நாள் ஓய்விற்கும் சராசரி மனிதனிற்குமான தொடர்பும் அற்றவண்ணமே காலம் செல்கிறது

ஒரு பக்கம் வாங்கும் பொருள் மீதான விலையேற்றம் மறுபுறம் சம்பள உயர்வில்லாத வேலைகள். ஆசைகளை வைத்து வைத்து வாழ்வில் தேவைகளை அதிகரித்த உள்ளம் இன்று மறுபடியே தனது தேவைகளை குறைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. குறைத்து குறைத்து இயலாத கட்டம் ஒன்று வர பணவரவிற்கான வேறு வழிகளை நாடவேண்டிய நிர்பந்தம் குடும்பத்தலைவனின் பெரிய சுமையாகவே மாறுகிறது.

ஐந்து வருடங்களின் முன்னர் ஒரு மாதத்திற்கென வாங்கிய வீட்டுச்சாமான்களுக்கான பெறுமதியை கொண்டு இன்று ஒரு கிழமைக்கான தேவைகளையே பூர்த்தி செய்ய முடிகிறதா என்பது கேள்விக்குறி தான். கடந்த கால குழந்தைகள் கையில் இருந்த விளையாட்டுப்பொருட்கள் எல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு தெருவோரத்தில் இருந்து கண்ணாடி வழியே பார்க்கும் விழி நிலை விம்பங்கள் தான்

ஓரளவேனும் தப்பிப்பிழைக்கும் நடுத்தர வர்க்கம் ஒன்றையும் நாம் அவதானித்தேயாகவேண்டும். வெளிநாட்டு பணவரவுகளை நம்பியிருக்கும் நம்மவர்கள். நாட்டின் மேல்வர்க்கத்திலிருந்து கீழ்வர்க்கம் வரை இன்று ஓரளவேனும் தாக்குப்பிடிக்கிறதென்றால் கைகொடுப்பவன் வெளிநாட்டவனாக ஏதோ ஒரு நிலையில் இருக்கத்தான் செய்கிறான். 70களில் இருந்த நிலைக்கும் இன்றைய நிலைக்கும் எவ்வளவோ மாற்றங்கள். ஆச்சரிய நிலை தான்

சுயபொருளாதார நிலை விலக்கு கொடுக்கப்பட்டு பிறநாட்டுப்பொருட்களின் இறக்குமதி மீது சாதக முடிவுகள் எடுக்கப்பட்ட நிலை அப்போது மறுமலர்ச்சி போல கருதப்பட்டாலும் அது மெல்ல மெல்ல எம்மைத்தாக்கும் புற்றுநோயாக தான் மாறி வருவது காலம் செல்ல செல்லத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் புரிகிறது. நாட்டில் காணப்படும் பெரும்பாலான வளங்கள் இன்று வினைத்திறனாக பயன்படுத்தப்படாது அவை சார்ந்த உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும் நிலை இன்று வெகுவாகவே காணப்படுகிறது. உழுந்து, பயறு, தேன் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுதல், ஒடியல் மாவிலான உணவு வகைகள் கோதுமை மாவின் இறக்குமதியினால் சென்ற காலங்களை விட இப்போதைய காலங்களில் குறைவாக பயன்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல இறக்குமதி செயன்முறைகளால் உள்ளூர் உற்பத்திகள் பாரிய பின்னடைவை சந்தித்த வண்ணமே இருக்கின்றன. மெல்ல மெல்ல சுய உற்பத்தியை நலிவடையச்செய்து வெளிநாட்டு உற்பத்தியின் தூதுவர்களாகவே மாறியிருக்கிற நிலை தான் இன்று நம்முள் பலரிடமும்

இன்றைய நிலையில் ஒரு மனிதன் புதிதாக தொழிலொன்றை ஆரம்பித்தாலும் அதை நாடக்கூடிய நிலையிலுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது. காரணம் தேவைகள் குறைக்கப்பட்ட வாழ்க்கை செயன்முறை தான் இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. சிலருக்கு மூன்று வேளை உணவு இன்று இரண்டு வேளையாக்கப்படுகிறது. இன்னும் சிலருக்கு அதுவும் கேள்விக்குறியாகிறது. வீரம் நிறைந்த தேகங்கள் எல்லாம் இன்று மெல்ல மெல்ல சுருங்கித்தான் போகின்றன.

நாட்டையும் நாட்டு மண்ணையும் நேசிக்கும் எத்தனையோ உள்ளங்கள் இன்று பொருளாதார ரீதியில் மிகவும் சிதைந்தே போய் இருக்கின்ற.  
பெரும்பாலான பாவனைப்பொருட்கள் இறக்குமதியில் தங்கியிருக்க பொருட்கள் மீதான விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்ல பாவிக்கும் சாமானியனுக்கு வழங்கப்படும் சம்பளம் மாத்திரம் மாறவில்லை என்றால் அவனது உள்ளக்குமுறலும் நியாயமாகத்தான் தோன்றுகிறது. இந்த சாமானியன் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை இருக்கத்தான் செய்கிறான். அவனது வாழ்க்கைத்தரத்தை மாறாமல் செய்ய எத்தனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை சவால் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அது கீழ்மட்டத்தொழிலாளியாக இருக்கட்டும் அல்லது மேல்நிலை தொழிலாளியாக இருக்கட்டும்.

இன்று பட்டப்படிப்பிலும் எப்போது முடியும் என்ற சந்தேகத்துடனான கல்வியையும், விரிவுரையாளர்களின் பணிநிறுத்தத்தையும் மாறி மாறி காணும் பல்கலைக்கழக மாணவனுக்கு பட்டப்படிப்பின் பின்னரான தொழில்சார் வாழ்க்கையும் கூட கேள்விக்குறி தான்.

அரசாங்க வேலைகளை நாடும் வர்க்கத்தினரை விட தனியார் வேலைகளை நாடும் வர்க்கத்தினர் மெல்ல மெல்ல கூடுகின்றனர் என்பதையும் ஏற்க வேண்டித்தான் வருகிறது. அதிலும் வெளிநாட்டு வேலை என்ற நிலையும் பல இளைஞர்களால் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையாகவே காணப்படுகிறது. இது இன்றைய சூழலின் அத்தியாவசியம் என்றாலும் அது மறுப்பதற்கில்லை.

மனைவிற்கு ஒரு சேலை வாங்கும் கணவனின் நிலை, தாய் தந்தைக்கு உடைகள் வாங்கும் மகனின் நிலை, பிள்ளைகளை மகிழ்விக்க பிரயத்தனப்படும் தந்தையின் நிலை என எல்லாமே இன்றைய சூழலில் ஒரு தவிப்பா போராட்டமாக காணப்படும் இந்த நிலையில் நாட்டின் உள்ளார்ந்த உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய வழிகளை காணாது விட்டால் னிவரும் சமுதாயத்திற்கு வாழ்வின் பெரும்பகுதியும் விழிநிலை விம்பங்களாகவே காணப்படும்.

Comments

Popular posts from this blog

இரையாகும் கனவுகள்...

அதிகாலை நனைத்த மழையில் இன்னமும் ஈரலிப்பு குறையாத அந்த வீதியின் வழியே மெல்ல மெல்ல வாகனங்களும் கிராமத்து வாசிகளும் பயணிக்க தொடங்குகிறார்கள் . மாட்டின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளின் ஒலியும் சேவலின் கூவலுடன் ஐக்கியமாக காலைக்கதிரவனின் கதிர்களும் பசுந்தளிர் இலைகளின் ஊடே சென்று பூமாதேவியை வணங்கிய வண்ணம் இருந்தன . ஆங்காங்கே ஓடுகள் கொண்ட கல்வீடுகளும் கிடுகுகளினால் வேயப்பட்ட மண் குடிசைகளும் கலந்த சூழலாக இருந்தது முல்லைபுரம் . வரிசை தவறாது வீட்டு முற்றத்திலே இடப்பட்ட கோலமும் தரிசை தவிர்க்கின்ற வீட்டு மரங்களின் வரிசையும் முல்லைபுரத்தின் பண்பாட்டையும் எழிலையும் பறைசாற்றிக்கொண்டு இருந்தன . சேய்மையில் இருந்து வரும் சிவன்கோயில் மணியும் அண்மைக்குடிலை நிரப்பும் சுப்பிரபாதமும் காற்றுடன் கலந்து தெய்வீக அலைகளை பரப்பிக்கொண்டே இருந்தன . தூரத்திலே ஒரு குடிசையில் , பூசைமணியொலியும் செண்பகத்தின் உதடுகளிலிருந்து வரும் சக்தி தோத்திரங்களும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது . கிடுகுகளின் இடைசல் வழியாக மெல்ல மெல்ல மேலெழத் தொடங்கிய சாம்பிராணிப்புகையும் காற்றுடன் கலந்து வந்த சுப்பிரபாதமும் தெய்வாம்சம...

நீளப்பயணித்த தமிழே!!!

இவ்வுலகம் கண்டிருக்கவல்ல கடந்த கால சம்பவங்களினை எளிதாக வரலாறு எனும் பதத்தினுள் உள்ளாக்கிவிடலாம். இன்றைய சமுதாயத்தின் எழுச்சிக்கும் வாழ்வியல் கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கும் இந்த வரலாறு எனும் பதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஒரு நாடாகட்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயமாகட்டும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்களால் வழக்கில் பயன்படுத்தப்பட்ட மொழிகள் மற்றும் அவர்களின் முகவரி, அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மூலத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கும் போது அங்கே வரலாற்றின் அத்தியாவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒருவரது முகவரியும் அவரது வழக்கில் காணப்படக்கூடிய மொழியும் நாகரிகம் என்ற மாயையினுள் சிக்குண்ட வண்ணம் பயணிக்கவேண்டிய நிர்பந்தம் காணப்படுவதால் வரலாறு என்கிற எண்ணக்கருவே கடந்தகால நிகழ்காலத்திற்கிடையிலான இணைப்பினை வழங்குவதற்கான ஆதாரமாகிறது. அந்த வகையில் எமது தாய் மொழியாம் தமிழ் மொழி மற்றும் தமிழ் மொழி மாந்தர்கள் என்று நோக்கும் போது தமிழர்களை விட தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமான தன்மைகள் குறைந்து தமிழர்களை விட தமிழ்பேசுபவர்களின் எண்ணிக்கை குறையுமளவ...

தவறிழைத்த ஓர் தலைவி!!!

சற்றே பழக்கப்பட்ட இடம் . மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை பலமுறை ரசித்த இடம் . மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம் . சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம் . நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும் இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின் அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு . மாலைச்சூரியனின் செம்மையை பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது . இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும் .  சிறிய வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம் அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது . பிஞ்சுமுகமிரண்டும் சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை வழியே .. பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்ல...