சற்றே பழக்கப்பட்ட இடம். மர இலைகளினூடே வருகின்ற சூரியதேவனின் காலைக்கதிரினை
பலமுறை ரசித்த இடம். மெய்மறந்து குயிலோசையை பலமுறை கேட்ட இடம்.
சுதந்திரமாய் இளமைக்காலத்தை அனுபவித்தே கழித்த இடம். நீண்ட நாட்களின் பின்னர் தான் அவ்விடங்களில் அவள் பாதம் படருகின்ற போதிலும்
இம்முறை தன் மண்ணையும் மண்ணில் பதிந்திருக்கிற விசால மரங்கள், கொடிகள், செடிகள் என எந்தவொன்றின்
அழகையும் ரசிக்கும் நிலை இல்லை அவளுக்கு. மாலைச்சூரியனின் செம்மையை
பதித்த அந்த விழிகளில் ஒரு தோல்வியின் விம்பம் மாத்திரம் நன்றாகவே பளிச்சிட்டது.
இருகைகளும் இரு சிறிய கைகளின் இணைப்பிலிருக்க பெண்ணவளின் வழியிலேயே
செல்கிறது மேலதிகமான அந்த நான்கு பிஞ்சுக்கால்களும். சிறிய
வதனமிரண்டிலும் வற்றியும் வற்றாததுமான கண்ணீரை தேக்கி வைத்த விழிகள் ஏதோ ஒரு சோகம்
அரங்கேறியிருப்பதை மாத்திரம் உணர்த்துகிறது. பிஞ்சுமுகமிரண்டும்
சோர்வினை தெள்ளத்தெளிவாக காட்டியபோதிலும் அமைதியாகவே செல்கிறது அந்தப்பெண்ணவளின் பாதை
வழியே..
பார்க்கின்ற இடமெல்லாம் தலைவியாய் தம்மவர்கள் எல்லோரையும் வழிநடத்திச்சென்ற
தாயவளின் காட்சிகள் அவள் முன்னே வந்து வந்து செல்லவும் ஏமாற்றம் நிறைந்த அந்த வதனம்
நினைவுகளையும் சற்று அசைபோடவே விழைகிறது.
அம்மா இல்லாததொரு தவிப்பையும் அவசியத்தையும் மெல்ல மெல்ல உணரத்தொடங்குகிறாள். தலைவியாய் அன்னை வழிநடத்தும்
போதெல்லாம் வெகுளித்தனமாக செல்லம் நிறைந்தவளாக தலைமைப்பண்புகளை பெறத்தவறியவளாகவே வாழ்வின்
பல கணங்களை கடந்து இருந்ததை நினைத்து இப்போதும் சற்றே நொடிந்தே போகிறது அந்த உள்ளம்.
வதன அசைவுகள் அழுகையை உரைத்தாலும் அங்கோ கண்ணீர் சற்று வற்றியே விட்டது.
விழிகள் மாத்திரம் அதே செம்மையில்.
வேற்றவன் மீது கொண்டது காதலா அல்லது மோகமா என்றும் சற்றே எண்ணத்தோன்றுகிறது
அவளுக்கு. கட்டுக்குலையாமல்
ஒன்றித்த இயற்கையுடன் வாழ்ந்துவந்த இனத்தை விட்டு விலகுமளவிற்கு ஒரு காதல் வழி காட்டுமா
என்ற கேள்வி பல தடவை அவள் மனதை ஆட்கொண்டும் அதற்கு சாதகமான விடையொன்றை அறிய இயலாதவளாய்
இருப்பதுவே அவளுக்கு உரைத்திருக்கும் அவளின் தவறை.
சற்றே மாறுபட்ட உருவம், வேற்று மொழி. வசீகர தோற்றம்.
பொன்னிற மேனி என வேற்று சூழலில் இருந்து வந்தவன் மீது அறிவை மயக்கும்
மோகத்தை வைத்து கடைசியில் அவனாலேயே ஏமாற்றப்பட்டதையும் தன் இனத்தின் அடையாளம் குலையுமளவிற்கு
தன் மோகம் இருந்துவிட்டமையையும் எண்ணி நொறுங்கி போக விரும்புகிறது அவள் உள்ளம்.
நிகழ்வனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சகல தவறிற்கும்
காரணமாகி இன்று சிறியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிலை கூட தன்னில் இல்லாத்தையிட்டு
சற்றே கேவலமான எண்ணம் அவளின் மீது அவளிற்கே தோன்றுகிறது. கூட்டத்தலைவி
என்ற ஒரு அடையாளம் இப்போது வெகுவாகவே மாறியிருக்கிறது. கூட்டமொன்றின்
அவமானச்சின்னமாக , ஒரு தோல்வியின் சின்னமாக…
முத்தோர்கள் இளையோர்கள் என்று எண்ணிலடங்கோர் பலியுண்டும் கூட்டத்தை
வழி நடத்தும் குருக்கள் மரியாதைக்குரியோர் என்று பலர் அறிவுரைத்தும் மோகம் என்ற மாயையினால்
உள்வாங்கப்பட்டு அனைத்தையும் நிராகரித்து ஈற்றில் தனது அடையாளத்தை கலாசாரத்தை எல்லாம்
இழந்தவளாய் தன் இனத்திற்கே மாபெரும் தவறினை செய்துவிட்டவளாய் இன்று உணர்கிறாள். அன்றோ சிரிப்பதற்கும் சிலர்.
அழுவதற்கும் சிலர். விழிநீர் துடைக்க சிலர்.
இன்னல்கள் அகற்ற சிலர் என்று ஒரு கூட்டமே இவளுக்காய் காத்திருக்க இன்றோ
நடக்கிறாள் தன்னந்தனியே இரு பாலகர்கள் மாத்திரம் உடன் வர. களையிழந்த
காட்டின் வழியே நடந்து செல்கிறது அந்த பாதங்கள். ஆங்காங்கே தறிக்கப்பட்ட
மரங்களின் அடையாளங்களையும் அவதானிக்கத்தவறவில்லை அவ்விழிகள். இளமையில் காதை மயக்கும் குயிலோசைகளும் விலங்குகளின் ஒலிகளும் சற்றே மாறி தன்னினப்பெண்களின்
அலறல் சத்தமும் மரண ஓலமும் வட நாட்டவர்களின் வெ(ற்)றிச்சிரிப்புகளும் தான் இன்று அவளது செவிகளை மீண்டும் மீண்டும் பதம் பார்த்தவண்ணமே
இருந்தன. வற்றிய விழியிலும் மெல்ல மெல்ல கண்ணீர் சுரக்க ஆரம்பிக்கிறது.
தெளிந்த சிந்தையும் அவளுக்கு காலம் கடந்தே கிடைக்கிறது. மாபெரும் தவறிற்கு காரணமாகி
விட்டதை இப்போது வெகுவாகவே உணர்கிறாள் அவள். தன்னை நம்பியிருக்கும்
தன் பிள்ளைகளையாவது கரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது. சற்றே இறுக்கமாக பற்றுகிறாள் இரு கைகளையும். இரு கைகளுள்ளும்
இருக்கிறது இவளது எதிர்கால சந்ததி.
கால்களும் பயணிக்கிறது. தூரத்திலே ஒரு குடியிருப்பை விழிகள் காண சற்றே
தயக்கத்துடன் கால்கள் நகர்ந்து சென்று குடியிருப்பை அணுக கூட்டமாய் குவிகிறது அவளினத்துறவுகளும்
உடற்கூட்டை சிதறடிக்கும் கற்களும்…
Comments
Post a Comment