தாய்த்தமிழே!!!
உலகில் முதல் மாந்தன் எப்போது தோற்றம் பெற்றானோ அப்போதே மொழியின் தோற்றமும் ஆரம்பித்திருக்கவேண்டும். உலகில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் மாந்தனின் பிரவேசம் ஆரம்பிக்க மொழிகளின் பிரவேசமும் உதயமானது. ஆனால் இவ்வாறு தோன்றிய மொழிகள் அனைத்தும் ஒரே மாதிரியான ஒலியமைப்புக்களை பயன்படுத்தவில்லை. ஒரு மொழியானது எவ்வாறு தோற்றம் பெறுகிறது பெரும்பாலும் ஒரே விதமான அமைப்புகளை மாந்தர்கள் தம்மிடத்தில் கொண்டிருக்கையில் மொழிகள் மாத்திரம் ஏன் பலவகையாக வேறுபட்டு காணப்படுகிறது, மொழிகளுக்கிடையான வேறுபாடுகளின் அடிப்படை என்ன என்பது பற்றி நாங்கள் அறிந்திருக்க கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.
பொதுவான ஒலிகள் மொழிகளுக்கிடையில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்குடும்பத்திற்கென்றும் தனித்துவமான ஒலிகளும் ஏராளமாக காணப்படுகிறது. ஒரு மொழியானது எந்த வகையில் தோற்றம் பெறுகிறது என்பது அந்த மொழியினைப்பயன்படுத்துபவர்கள் வாழும் சூழல் அத்துடன் அந்தச்சூழலில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள் என்று அனைத்துவிதமான உயிரினங்களும் ஏற்படுத்தும் ஒலிகளே மொழியில் காணப்படும் ஒலிகளுக்கு அடிப்படையாயின. இவ்வாறு ஒவ்வொரு பிரதேசமும் தாம் இனங்கண்ட ஒலிகளின் அடிப்படையில் மொழிகளை உருவாக்கினர்.
வேட்டையாடிவந்த குழுக்கள் படிப்படியாக கி.மு 10000 அளவில் வேளாண்மையிலும் நாட்டம் காட்ட தொடங்கினர். சுமேரிய நாகரிகமாகட்டும் அதன் பின் வந்த எகிப்திய, இந்து, கிரேக்க, சீன நாகரிகங்கள் ஆகட்டும் அனைத்தும் ஆற்றுக்கரைகளை அண்டி தமது நாகரிக வளர்ச்சியை மேற்கொண்டது அல்லாது அதுவரை காலமும் பேச்சு ரீதியாக மொழியை வளர்த்த மாந்தர்கள் மொழிகளில் வரி வடிவை பயன்படுத்த தொடங்கினார்கள்.
இந்த மொழிஞாலத்தில் தமிழினை நோக்கும் போது இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ் மொழிக்கும் தமிழின் ஆரம்பத்தோற்றத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகம். இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சங்க காலத்திற்கு முந்தைய காலப்பகுதியில் தமிழ் மொழிப்பயன்பாடு வளமாக காணப்பட்டது அறியமுடிகிறது. எனினும் கிட்டத்தட்ட 570 மில்லியன் ஆண்டுகளின் முன்னர் காணப்பட்ட லெமூரியா கண்டம்(கோண்டுவானா / குமரிக்கண்டம்) தமிழின் தாயகமாக காணப்பட்டதாகவும் தமிழின் வளர்ச்சி அக்காலகட்டத்தில் மிக உச்சத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேதங்கள் எல்லாம் குமரிகண்டத்தில் வாழ்ந்தவர்களினால் பாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேதங்களில் சொல்லப்படும் பல்வேறு வகையான இடங்களின் பெயர் லெமூரியா கண்டத்தில் காணப்பட்ட இடங்களின் பெயர்களாக அமைவதாகவும் மேலும் புராணங்கள் வாயிலாகவும் லெமூரியா கண்ட மக்களின் வாழ்க்கை வரலாறுகளை அறியக்கூடியதாக உள்ளது. இப்போது காணப்படும் சுமத்திரா தீவு லெமூரியா காலத்தில் நன்மதுரை என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
3000ம் ஆண்டுகளின் முன்னர் எழுதப்பட்ட தொல்காப்பியம் தொடக்கம் சீத்தலை சாத்தனாரின் மணிமேகலை உட்பட பல்வேறு தொன்மை வாய்ந்த நூல்கள் லெமூரியாவின் அழிவையும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாட்டம்சங்களையும் செப்புகின்றன. தமிழின் தொன்மையை செப்ப பெரும்பாலானோர் தொல்காப்பியம் பற்றி தான் கூறுவார்கள். ஆனால் தொல்காப்பியத்திற்கும் முன்னதாக உருவாக்கப்பட்ட ஒரு நூல் தான் அகத்தியம். ஆனால் இந்த நூலின் எப்போது தோற்றம் பெற்றது என்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் 3500 ஆண்டுகளுக்கும் முன்னதாக உருவாக்கப்பட்டது என்பது திண்ணம். தொடர்ச்சியாக இடம்பெற்ற மூன்று கடற்கோள்களின் விளைவால் அக்காலத்து ஆய்வுகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. பிரபலமாக கருதப்படுகின்ற பிராமிய கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துகள் தமிழ் எழுத்துக்களாக காணப்பட்டவை எல்லாம் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன என்றால் அது மிகையாகாது. பிராமி எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் தமிழ் நாட்டில், முக்கியமாக மதுரையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில், இயற்கையான குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகள் அசோக மன்னரின் புகழ் பெற்ற கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் ஒத்திருப்பதால் தமிழ்நாட்டுக் குகைக் கல்வெட்டுகளின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 2-ம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பிராகிருத மொழிகளுக்கான மௌரிய காலத்து பிராமி எழுத்துகளைக் கூட்டியும் குறைத்தும், வேறு பல மாற்றங்களைப் புகுத்தியும் தமிழை எழுதுவதற்கு ஏற்ற தமிழ் பிராமி எழுத்து முறை உருவாக்கப்பட்டது. இந்த எழுத்துகளே தமிழ் மொழியை எழுத குகைக் கல்வெட்டுகளிலும் காசுகளிலும் சில்லுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன அத்துடன் பல்வேறு அகழ்வாய்வுகள் மூலமாக தமிழினை குறிப்பிட்ட காலப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் தமிழின் தொன்மை பற்றி நிலையான கருத்துகளை கூறிய முடியாத வண்ணம் தமிழின் தொன்மை புரியாத புதிராகவே உள்ளது.
பிராகிருத மொழிகளுக்கான மௌரிய காலத்து பிராமி எழுத்துகளைக் கூட்டியும் குறைத்தும், வேறு பல மாற்றங்களைப் புகுத்தியும் தமிழை எழுதுவதற்கு ஏற்ற தமிழ் பிராமி எழுத்து முறை உருவாக்கப்பட்டது. இந்த எழுத்துகளே தமிழ் மொழியை எழுத குகைக் கல்வெட்டுகளிலும் காசுகளிலும் சில்லுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன அத்துடன் பல்வேறு அகழ்வாய்வுகள் மூலமாக தமிழினை குறிப்பிட்ட காலப்பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் தமிழின் தொன்மை பற்றி நிலையான கருத்துகளை கூறிய முடியாத வண்ணம் தமிழின் தொன்மை புரியாத புதிராகவே உள்ளது.
இவ்வாறு மலைக்க வைக்கும் தமிழ் திராவிட மொழிகளில் ஒன்றாகிய சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக வடநாட்டு நூலாசிரியர்கள் ஆதாரங்களென பலவற்றை காட்டி செப்பினாலும் அவை அனைத்தும் மெய்ப்பதற்கில்லை. அகழ்வாராய்வுகளின் அடிப்படையில் சமஸ்கிருதம் வேத காலத்திலும் தமிழ் சங்க காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் சமஸ்கிருதம் தமிழினை விட தொன்மையானது என்று கூறமுடியாது. வேதங்கள் தொட்டு புராணங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் தமிழ் மொழியின் பயன்பாடு சங்க காலத்திற்கு அப்பாற்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. தமிழின் தொன்மையாகட்டும் தொன்மை தொட்ட காலத்திலிருந்து இன்று வரை பல்வேறுபட்ட மொழிகள் மொழிக்கலவையினால் தமது தனித்துவத்தன்மையை காக்கத்தவறியபோதும் தமிழ் மீதான மொழிக்கலவை மிக மிக குறைவு என்றே சொல்லலாம். இதற்கு உதாரணமாக :
அரசர்களின் வரலாறுகளை செப்பும் ஹீப்ரு மொழி (Hebrew language) நூல் ஒன்றில் கி.மு. 1000இல் மன்னன் சாலமனின் (Solomon) கலங்கள் ஏற்றிக் கொண்டு வந்த வணிகப் பொருட்களைக் குறிக்கும் பட்டியலில், மயிலைக் குறிக்கும் “ÉA’’ (Tuki) என்னும் சொல்லே, உலகில் எழுத்துருவில் காணப்படும் மிகப் பழைய திராவிடச் சொல் ஆகும். ஹீப்ரு மொழியில் ‘ÉA’ (Tuki) எனப்படும் இச்சொல்லின் தமிழ் வடிவம் தோகை (மயில்) என்பதாகும்.
இவற்றிற்கு மேலாக பள்ளிப்பருவத்தில் கற்பிக்கப்படும் ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னரும் திருக்குறள் 2000ம் ஆண்டுகளுக்கு முன்னரும் உருவாக்கப்பட்டு இன்று வரை அதன் தனித்துவம் கெடாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
தமிழ் எழுத்துகளில் சில அயல்மொழி எழுத்துகள் கலக்கப்பட்டது தொல்காப்பியம் மூலமாகத்தான். ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ போன்ற எழுத்துகளை இதற்கு சான்றாக குறிப்பிடலாம். மற்றும் தமிழ் இன்று கொண்டிருக்கும் வடமொழிச்சொற்களில் பெரும்பாலானவை கி.பி 11 முதல் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் உள்ளிட்டோர்களால் வலிந்து திணிக்கப்பட்டதேயன்றி அவை எல்லாம் தமிழ் மொழி இன்னொரு மொழியில் இருந்து உருவாகியதாக கருதப்படமாட்டாது. ஆனால் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து தான் திரிபடைந்தன.
இலக்கிய வளம், தொன்மை காரணமாக செவ்வியல் மொழியாகவும் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவு நிலைமை, தாய்த்தன்மை, பண்பாடு, கலை, பட்டறிவு, பிறமொழித்தாக்கமிலாத்தன்மை, இலக்கியவளம், உயர் சிந்தனை, கலை இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு பங்களிப்பு மற்றும் மொழிக்கோட்பாடு காரணமாக செம்மொழியாகவும் தமிழ் மொழியானது காணப்படுகிறது. மற்றும் செம்மொழிக்கான தகுதிப்பாடுகள் அனைத்தும் கொண்டதாக உலகில் தமிழ் மொழி மாத்திரம் தான் காணப்படுகிறது என்பது பலரும் அறியாத மொழியியல் உண்மையாகும். இதனால் தான் ஆங்கிலேயர் கூட தம்மொழியை செய்வியல் மொழி என்றோ அல்லது செம்மொழி என்றோ அழைப்பதில்லை. ஆங்கில மொழியானது தோற்றம் பெற்று 1000 வருடம் அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியானது அதன் ஆரம்பகாலகட்டத்தில் இருந்து மொழிக்கலவையில் சிக்கி தனது தனித்துவத்தை இழக்காத ஒரு மொழி என்று ஏற்கனவே கூறியிருந்தேன். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமானது அரசாட்சியிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் நாகரிக ஊடுருவல் காரணமாகவும் வர்த்தக நடவடிக்கைகளாலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் பல்வேறு மொழிகளில் காணப்படுவது தமிழின் சிறப்பை மென்மேலும் எடுத்தியம்புகிறது என்றிடலாம்.
கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ்சொற்கள் தற்போது வழக்கில் உள்ள கொரிய மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத்தொடர்பு மொழிகளுக்கிடையில் மாத்திரம் இல்லை. கொரிய மக்களின் கலாசார பண்பாட்டு செயன்முறைகளில் சிலதும் தமிழர் கலாசாரத்தினை ஒத்ததாக காணப்படுகிறது. இவ்வாறு கொரிய உச்சரிப்புகள் தமிழுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை காட்டினாலும் எழுத்து என்று நோக்கும் போது அவை சீன எழுத்துக்களை ஒத்ததாக காணப்படுகிறது. கொரிய மொழியானது தோற்றம் பெற்று கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் ஆனாலும் அதற்கான வரிவடிவம் 600 ஆண்டுகள் முன்னதாக தான் தோற்றம் பெற்றது. கொரிய எழுத்துகள் தோற்றம் பெற்ற காலம் சீன ஆட்சி நிலவியதன் காரணமாக கொரிய எழுத்துகள் சீன எழுத்துக்களை ஒத்ததாக காணப்படுகிறது. எனினும் ஒரு மொழி என்று நோக்குமிடத்து வரி வடிவத்தை விட ஒலி வடிவம் தான் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கொரிய மொழியின் அடிப்படை தமிழ் என்று கூறுவதில் எவ்வித ஐயப்பாடும் இருக்காது.
சமஸ்கிருதம், சிங்களம், கிரேக்கம், ஹீப்ரு, சீனம், ஜப்பான், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் தமிழின் கலப்பு காணப்படுகிறது என்பது பண்டைய காலத்தில் காணப்பட்ட தமிழின் ஆதிக்கத்தை புலப்படுத்துகிறது.
ஒரு மொழியானது கற்பதற்கு எளிமையானதாக இருப்பதற்கு எழுத்துகளின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றும் நிலையான / மாற்றம்பெறாத உச்சரிப்புகளை (ஒலிகளை) கொண்டிருப்பது அவசியமாகிறது. ஒரு மொழிவளர்ச்சிக்கு இவ்வாறான அம்சங்கள் இருப்பது விரும்பத்தக்கது. அத்துடன் சொற்களானவை எழுத்துக்களின் சேர்க்கையாக இருப்பதால் குறித்த எழுத்துக்களின் உச்சரிப்பினை அறியுமிடத்து ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் நிலையான ஒலிகள் காணப்படுமிடத்து அவை சேர்ந்த சொற்களை உச்சரிப்பது இலகுவாகிவிடும். இதனால் உச்சரிப்புகளுக்கென்று பிரத்தியேக கவனம் எடுப்பது தவிர்க்கப்பட்டு விடும். தமிழ் மொழி இவ்வாறான தன்மை கொண்டுள்ளதை நாம் அறியலாம். தமிழ் மொழியில் காணப்படும் சிறப்பு எழுத்தான “ஃ” மற்றைய எழுத்துகளுடன் சேர்க்கை பெற்று ஒவ்வொரு சேர்க்கைக்கும் ஒவ்வொரு தனித்துவமான உச்சரிப்பினை வழங்குவது தமிழின் சிறப்பே. மேலும் இந்த ஆய்த எழுத்தின் பயன்பாடு பண்டைய காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டாலும் தற்போதய காலகட்டம் இதன் பயன்பாட்டினை காண்பது அரிதே. ஆயினும் தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் நிலையான உச்சரிப்புகள் காணப்படுவதால் மொழிக்கற்றலில் உச்சரிப்பு எனும் பரிமாணம் இலகுவாகிறது. இதுவே ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஒவ்வொரு சொல்லிற்குமான உச்சரிப்பிற்கென (Pronunciation) பிரத்தியேக கவனம் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நிலை வேற்று மொழிகளை விட எம் தாய்மொழியாம் தமிழின் மேன்மையையும் தன்னிகரற்ற நிலையையும் உயர்வாக்கும் ஒரு நிலையாகும்.
அத்துடன் தமிழ் மொழியானது 2000ம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கிய வளம் பெற்றும் திகழ்ந்துவருகிறது. வாழ்வின் பல்வேறு கூறுகளை எடுத்து இயம்புவதில் தமிழ் இலக்கியம் சிறந்து விளங்குகிறது. வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி மற்றும் வாய்வழி இலக்கியங்கள் என பல பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது நம் தாய் மொழி.
அத்துடன் தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கும் முறை ஒரு எளிமையான பிரணாயாமப்பயிற்சியாக காணப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு மேலான தன்மைகளால் நிறைந்திருக்கும் நம்மொழி இன்று பல்வேறுபட்ட மொழிகளின் கலவையால் குறிப்பாக ஆங்கில மோகம் காரணமாக தமிழ் பயன்படுத்தப்படும் தன்மை குறைந்து வருகிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இன்றைய உலகம் பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளினால் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் கண்டிருந்தாலும் தமிழும் ஒவ்வொரு பரிமாணமாக முன்னேற்றம் கண்டுகொண்டு தான் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒலி வடிவத்தில் ஆரம்பம் கண்ட எம்மொழி இன்று வரி வடிவத்தை தாண்டி கணனியிலும் மொழிவளம் பெருகும் அளவிற்கு தமிழ் தனது நிலையை உறுதிப்படுத்தியவண்ணம் உள்ளது. தமிழ் மொழிக்கென ஏராளமான மென்பொருட்கள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாது தமிழர்கள் அநேகமாக எல்லா நாடுகளிலும் வியாபித்திருப்பதன் மூலம் தமிழ் மொழியின் அவசியம் எல்லா நாடுகளிலும் உணரப்படுகிறது. எத்தனை எத்தனை முன்னேற்றங்களை இந்த ஞாலம் கண்டாலும் அத்தனை முன்னேற்றங்களிலும் எம் மொழியாம் தமிழ் மொழி நிலைபெற்று நிற்பதென்பது திண்ணம்.
வாழ்க தமிழ்.
Congrats on describing the history and the greatness of our Tamil language in a nutshell.
ReplyDeleteThank You , Baanugopan.....
ReplyDelete